(இ - ள்.) விஞ்சையன - மரீசியானவன, நீளநூல்கொள் சிந்தை - பெரிய நூல்களிலே சென்று அறிந்த தன்மனமும், கண்கள் தாவ - தன் கண்களும் அவர் மேற்படரா நிற்ப, வேல் கொள் தானை வீரர் தம்மை - வேற்படையைக் கையிற்கொண்ட படைவீரர்களான விசயதிவிட்டர்களை, வியந்து நோக்கி நோக்கி ஆர்கலன் - வியப்படைந்து பன்முறையும் பார்த்தும் மனநிறைவு கொள்ளாதவனாகி, உள்மகிழ்ந்து - மனதிற்குள்ளே களிப்படைந்து, கால்கள் கொண்டு கண்ணிகாறும் - அடிகள் முதற் கொண்டு முடிமாலை வரையினும், கண்கண்டு - கண்களாற் பார்த்து, மால்கொள் சிந்தையார்கள்போல - பித்தரைப்போன்று, மற்றும் மற்றும் நோக்கினான் - மேன்மேலும் பார்த்தான், (எ - று.) மருசியானவன் விசயதிவிட்டர்களைப் பன்முறை கண்டும் மன நிறைவு கொள்ளாதவனாய் உள்ளத்தை ஒருவழிப்படுத்தி அடிமுதல் முடிவரையிலும் மீண்டும் மீண்டும் நோக்கியவண்ணமே யிருந்தனன் என்க. உடலிலக்கண நூன் முறைப்படி விசயதிவிட்டர்கள் அமைந்து விளங்கும் சிறப்பு மருசிக்கு, மகிழ்ச்சியளித்த தாதலின் மேன்மேலும் பார்க்கலாயினான். |