5. | செங்கண் ணெடியான் றிறம்பேசிய சிந்தை செய்த நங்கண் மறுவும் மறுவன்றுநல் லார்கண் முன்னர் அங்கண் விசும்பி னிருள்போழ்ந்தகல் வானெ ழுந்த திங்கண் மறுவுஞ் சிலர்கைதொழச் செல்லு மன்றே. | (இ - ள்.) நல்லார்கண் முன்னர் - கற்றுநல்லராகிய சான்றோர் முன்னிலையில், செங்கண் நெடியான் திறம்பேசிய - சிவந்த கண்ணையுடைய நெடிய புகழையுடைய திவிட்டனது மாண்பினைக் கூறுதற்கு, சிந்தைசெய்த - எண்ணிய, நங்கள் மறுவும் மறு அன்று - எம்முடைய குற்றமும் குற்றமாகக் கருதப்பட மாட்டாது, அஃதெங்ஙனமெனின்?; அம் கண் விசும்பின் இருள் போழ்ந்து - அழகிய இடமமைந்த வானத்தின்கண் செறிந்த இருளைப் பிளந்துகொண்டு, அகல்வான் எழுந்த - ஏனை நாற்பூதமும் தோன்றி விரிதற்கிடமான அவ்வானத்தின்கண் எழா நின்ற, திங்கள் மறுவும் - திங்களிடத்தே இயல்பாகவுள்ள களங்கமும், சிலர் கைதொழச் செல்லும் - அத்திங்கள் மேற் கொண்டுள்ள செயலின் மாண்பு கருதும் ஒருசிலரால் கைகுவித்துத் தொழப்பட்டு நடவாநிற்கும் ஆகலான், (எ - று.) இப்புலவர் பெருமான் கூறக்கருதிய திவிட்டன் புகழ்க்கு - திங்கள் ஒளி உவமை. இவர்பால் எழும் குற்றத்திற்கு அத்திங்களின்பால் | உண்டான களங்கம் உவமை. ஒளியுடைமைகருதித் திங்களைத் தொழுவோரான் அக்களங்கமும் தொழப்படுதல் போன்று எம்முடைய குற்றமும் திவிட்டன் புகழின்ஊடே கிடத்தலின் சான்றோரால் மதிக்கப்பட்டு மாண்புறுகின்றது என்றவாறு. “ஒண்கதிர் வாண்மதியம் சேர்தலான் ஓங்கிய அங்கண் விசும்பின்முயலுந் தொழப்படூஉம்“ என்றார் நாலடியினும் (176.) செங்கண் நெடியான் என்றது திவிட்டனை. திறம் - மாண்பு. பேசிய, செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மறு - குற்றம்; களங்கம். நல்லார் என்றது கற்று நல்லவராகிய நல்லிசைப்புலவரை. என்னை? ஆசிரியர் திருவள்ளுவனார் “நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே“ என்னுந்திருக்குறளில் கற்றாரை நல்லார் என்றே வழங்குதல் உணர்க. உலகில் நன்றறிவார் சிலராதல்பற்றிச் சிலர் கைதொழச் செல்லும் என்றார். அகல்வான், ஏனைநாற்பூதமும் தோன்றி விரிதற் கிடமான வான் என்க. அன்றும் ஏயும் அசைகள். | (5) | | |
|
|