(இ - ள்.)செம்பொன்வான் அகட்டு இழிந்து - செம்மையான அழகிய விண்ணின் நடுவில் இருந்து நிலவுலகத்தில் இறங்கி, தெய்வயானையுள் மறைஇ - தெய்வத்தன்மையுள்ள யானையிடத்தே மறைந்து, வம்புநீர் வரைப்பு அகம் - புதுமையான நீரைக்கொண்ட கடலை எல்லையாகவுடைய நிலவுலகத்தை, வணக்கவந்த மாண்புடை - வணங்கச் செய்யுமாறு தோன்றிய பெருமையையுடைய, நம்பிமீர்கள்! - நம்பிமார்களே! அம்பொன் மாலைமார்பினீர் - அழகிய பொன்னரிமாலையை அணிந்த மார்பையுடையவர்களே! நுங்கள் பாதம் நண்ணி நின்று இறைஞ்சுவார் - உங்களுடைய அடிகளைப்பொருந்தி நின்று வணங்குகின்றவர்கள், அருந்தவம் செய்தார்கள்-செய்தற்கரிய அருமையான தவத்தைச் செய்தவர்களாவர், (எ-று.) “எமக்குநீர் பணிந்த தென்னை?“ என்ற விசயன் கேட்டனனாதலின் அதற்கு மருசி இப்படிப் பதிலுரைக்கலாயினன் என்க. நீங்கள் மனிதக் கோலத்தோடு யானையின்மீ திருப்பினும், விண்ணிலிருந்து இறங்கிவந்த தேவரே யாவீர். உமது தெய்வத்தன்மையை மறைத்துள்ளீர் என்று கூறுகிறான். பேராழி மன்னர்கள் பிறக்கும்போது அரசன் தேவிக்குப் பதினான்கு கனாக்கள் நிகழுமென்பதும் வாயின் வழியாக யானை வயிற்றுட் புகுந்ததாகக் காண்பது அவற்றுள் ஒரு கனா என்பதும் சைநநூற் கொள்கை. ஆதலால் யானையுள் மறைஇ என்றான். |