(இ - ள்.) இமைகள்விட்ட - இமைத்தல் தொழிலை நீங்கிய, நோக்கம் ஏற - கண்பார்வையானது விசயதிவிட்டர்கள்மேற்செல்ல, இன்னபோல்வ சொல்லலும் - இவைகள் போன்ற சொற்களை மருசி கூறுதலும், சிமைகொள் தேவர்போல நின்று - மலையுச்சியை வாழுமிடமாகக்கொண்ட தேவர்களைப்போல நிலைத்து, திகழுகின்ற சோதியார் - விளங்குகின்ற ஒளியையுடைய விசயதிவிட்டர்கள், மாற்றம் அமைக - எம்மைப் புகழுகின்ற இந்த மொழிகளை விடுக, நும்மை - தங்களை, எங்கள் அடிகள்காண - எங்கள் தந்தையர் பார்க்குமாறு, ஏகுவாம் - செல்லுவோம், சுமைகொள் மாலை - சுமையாக இருத்தலைக்கொண்ட மாலையை, தொடு - அணிந்த, களிறு எருத்தம் - யானையின் பிடரியிலே, ஏறுக என்றனர் - ஏறுக என்று கூறினார்கள், (எ - று.) இமைகள் விட்ட நோக்கம் - இமையாது பார்க்கும் பார்வை. தம்மைப் புகழ்ந்துரைத்தலைக் கேட்டல் அறிவுடையார்க்கு நாணந் தருமாகலின் 'அமைகமாற்றம்' என்றனர். அடிகளாவார் பெரியார். அஃது ஈண்டுப் பயாபதி மன்னனை யுணர்த்திநின்றது. சுமைகொள் மாலை என்பதற்கு வண்டுகள் மொய்த்து அரற்றுவதால் ஒலிபொருந்திய மாலை என்றும் பொருள்கூறலாம். அவ்வாறு கூறற்குச் சும்மை சுமையென நின்றது என்று கொள்க. எருத்தம் - கழுத்து. சிமை - மலையினுச்சி. ‘தோய்வருஞ் சிமையந்தோறும்’ என்பது பரிபாடல். ‘சிமையமே மலையினுச்சி’ என்பது நிகண்டு. ஏறுக - அகரவீறு தொகுதல். |