(இ - ள்.) தெளிர்முத்த மணலும் - ஒளி விளங்குகின்ற முத்துக்களாகிய மணலும், செம்பொன் சுண்ணமும் - செம்பொன்னின் நிறமான நறுமணச் சுண்ணமும், சிதர்ந்து - சிதறப்பெற்றும், தளிர் - தளிரோடு கூடிய, தீம்தேன் - இனிய தேனையுடைய, முத்தம் மலரும் - முத்துப்போல் வெண்ணிறமான மலர்களும், போதும் - மலரும் பருவத்தரும்பும், சாந்தமும் - சந்தனமும், உழக்கி - ஒன்றாகச் சேறுபோலக் கலக்கப்பெற்றும், வண்டு ஆர் - வளையல் பொருந்திய, ஒளிர்முத்தம் முறுவலார் தம் - விளங்குகின்ற முத்துப்போன்ற பற்களையுடையவரான பெண்களின், உழைக்கலம் - உழைக்கலங்கள், கலந்து சேரப்பெற்றும், மாலை - மாலையாகத் தொங்கவிடப்பெற்ற, குளிர் முத்தம் - குளிர்ந்த முத்துக்கள், நிழற்றும் - ஒளி விடப்பெற்றும் உள்ள கோயில் அரண்மனையின், பெருங்கடை - பெரிய வாசலில், குறுகச் சென்றார் - அணித்தாகச் சென்றார்கள். (எ - று.) முத்தமணலும் செம்பொற் சுண்ணமும் சிதறிப் பூக்களுடனே அரும்பு களும் சந்தனமும் பெய்யப்பெற்றிருப்பதால் அவைகள் குழம்பாகப்பெற்று முத்தமாலை தொங்கவிடப் பெற்றுள்ள அரண்மனைப் பெருவாயிலை மருசியும் விசயதிவிட்டர்களும் குறுகினர் என்க. போது - மலரும் பருவத்து அரும்பு என்பர். |