பயாபதி மன்னன் பொற்கூடத்தில் அமருதல்

508. மற்றவ ரடைந்த போழ்தின் 1வாயிலோ 2ருணர்த்தக் கேட்டுக்
கொற்றவ 3னருவி தூங்குங் குளிர்மணிக் குன்றம் போல
முற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக்
கற்றைகள் தவழச் 4சென்றோர் கனககூ டத்தி ருந்தான்.
 

     (இ - ள்.) மற்று - பிறகு, அவர் அடைந்த போழ்தின் - மருசியும்
விசயதிவிட்டர்களும் அரண்மனையின் பெரிய வாசலைச் சேர்ந்த பொழுதில், வாயிலோர்
உணர்த்தக் கேட்டு - வாயில் காவலாளர்கள் தெரிவிக்க அதனைக் கேட்டு, கொற்றவன் -
பயாபதி மன்னன், அருவி தூங்கும் - நீரருவி தன்மீது வழியப் பெற்ற, குளிர்மணிக்
குன்றம்போல - குளிர்ந்த மணிகள் பொருந்திய குன்றத்தைப்போல விளங்குமாறு, முற்றி
நின்று - தொழில் முற்றுப்பெற்று நின்று, இலங்கும் - விளங்குகின்ற, செம்பொன் முடிமிசை
- செம்பொன் மயமான முடியின்மேல், முத்தமாலைக் கற்றைகள் தவழ - முத்தமாலைகளின்
தொகுதிகள் தவழாநிற்க, சென்று ஓர் கனககூடத்து இருந்தான் - போய் ஒப்பற்ற
பொன்மயமான மண்டபத்திலே அமர்ந்திருந்தான், (எ - று.)

விஞ்சைத் தூதனும் விசயதிவிட்டர்களும் வந்த செய்தியைத் தெரிவிக்கக் கேட்ட பயாபதி
மன்னன் விஞ்சைத் தூதனை வரவேற்பதற்குத் தகுதியான ஓர் அழகிய மண்டபத்திலே
சென்றிருந்தனன், அம்மண்டபத்திற்கு அரசன் செல்லும்போது, அரண்மனையில்
தொங்கவிடப் பெற்றிருந்த முத்துமாலைகள் அரசனது முடியின்மேல் தழுவி நின்றன.
அக்காட்சி அழகிய குன்றிலே வெள்ளிய நீரருவிகள் இழிதலைப்போன்று
விளங்கியதென்கிறார்.

மற்று என்பதை அசை நிலையாகவோ பிரிநிலையாகவோ கொள்ளினும் அமையும். போழ்து
- பொழுது என்பதன் மரூஉ.

( 78 )