(இ - ள்.) மன்னவ குமரரோடும் - அரச குமாரர்களாகிய விசயதிவிட்டர்களுடனே, விஞ்சையன் - வித்தியாதரனாகிய மருசியானவன், மகிழ்ந்து - மகிழ்ச்சியுற்று, வையத்து - நிலவுலகத்திலே, இன்னருள்புரிந்த வேந்தன் - யாவரிடத்திலும் இனிய அருளைச் செய்து வருகின்ற பயாபதி மன்னவனுடைய, இடை அறிந்து - செவ்வியறிந்து, இனிதின் எய்தி - அண்டு மகிழ்ச்சியோடு அடைந்து, கல்நவில் தோளினான் தன் - மலையை ஒத்த தோளையுடையவனாகிய பயாபதி மன்னனுடைய, கழல் அடி - வீரக் கழலையணிந்த கால்களை, தொழுது நின்றான் - வணங்கி நின்றான். அன்னவர்க்கு - அங்கு அடைந்த மூவருக்கும், இருக்கை தானம் - அமருவதற்குரிய இருக்கையை, அரசனும் அருளிச் செய்தான் - பயாபதி மன்னனும் அவர்கட்குக் கொடுத்தான், (எ - று.) யானையினின்றும் இறங்கிய மருசியானவன் விசயதிவிட்டர்களுடன் பயாபதி மன்னனிடஞ் சென்று அவனை வணங்கி நின்றான். அரசன் அம்மூவரும் அமர்தற்குரிய இருக்கையைக் காட்டினான் என்க; இறை - காணுதற்குரிய பொழுது என்று பொருள் கொள்ளல் சிறப்புடையது. |