(இ - ள்.) அ மாநகர் உடை மன்னன் - அத்தகைய சிறப்புடைய போதன நகரத்தையுடைய மன்னன் எத்தகையன் எனின்? பயாபதி என்னும் பேர் உடை - அவன் பயாபதி என்று சொல்லப்பெறுகிற பேரையுடையவனும்; வெற்றிவேல் மணிமுடி வேந்தர் வேந்தன் - வெற்றியைக் கொடுக்கின்ற வேலாயுதத்தையும் மணிகள் இழைத்த முடியையும் உடைய அரசர்க்கரசனும்; தன்உயர் ஒற்றைவெள் குடை நிழல் - தன்னுடைய உயர்ந்த ஒப்பற்ற வெண்கொற்றக் குடைநிழலிலே வாழ்கின்ற; உலகிற்கு ஓர் உயிர்ப்பெற்றியான் - உலகமாகிய உடலுக்குத் தான் ஓர் உயிராக விளங்குகின்ற பெருமையை உடையவனும் ஆவான். (எ - று.) பயாபதி மன்னன், தனது நாட்டு மக்களின் உயிரைப்போற் சிறந்து விளங்குகின்றான் என்க. மற்று-அசை. அமாநகர்-தொகுத்தல். பிரசாபதி என்னும் சொல் பயாபதி என்று திரிந்தது. பிரசாபதி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் மக்கட்குத் தலைவன் என்பதாகும். வேந்தர் : வேந்தன். மன்னர்கட்கு மன்னனாக இருப்பவன் “நெல்லுமுயிரன்றே நீருமுயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம்“ என்றார் புறத்தினும் ( 186 ) உலகம் ஈண்டுயிர்த்தொகுதி. மன்னுயிர்க்கெல்லாம் ஓருயிராய்த் திகழ்பவன் என்பதாம். |