(இ - ள்.) ஆரியன் - சிறந்தவனாகிய பயாபதி மன்னவன், வீரியக்குமரரோடும் - ஆண்மைக் குணமுள்ள விசயதிவிட்டர்களென்கிற மக்களோடும், விஞ்சை அம் செல்வனோடும் - வித்தியாதரச் செல்வனாகிய மருசியோடும், காரியக்கிழவர் சூழ - அரசியற் காரியங்கட்குரியவர்களாகிய அமைச்சர்கள் முதலியோர் சுற்றிலும் வீற்றிருக்க, அலர்ந்தசோதி - பரவிய ஒளியையுடைய, அருங்கலப்பீடம் நெற்றி - அரிய அணியைப்போற் சிறந்த அரியணையின் மேலிடத்திலே, கவின்று - விளங்கி, கண்குளிர - கண்டவர் கண்கள் குளிர்ச்சியடையுமாறு, தோன்றி - காணப்பெற்று, தாரகை - விண்மீன்களால், அணிந்து - அழகு செய்யப்பெற்று, தோன்றும் - விளங்குகின்ற, சந்திர சவியன் ஆனான் - திங்கள் போன்று ஒளி படைத்தவனாக விளங்கினான், (எ - று.) மருசி, விசயதிவிட்டர்கள், அமைச்சர்கள் ஆகியோர் தன்னைச்சூழ அவர்களாற் பொலிவுபெற்று விளங்கும் பயாபதி மன்னவன், விண்மீன்கள் தன்னைச் சூழச் சிறப்புற்று விளங்கும் திங்கள்போல விளங்கினான் என்பதாம். அருங்கலன்க ளணியப்பெற்ற அரியணை எனினுமாம். |