(இ - ள்.) அலகைஇல் தானை வேந்தன் - அளவிடப்படாத படையை உடைய பயாபதி மன்னன், அம்பரசரனை நோக்கி - விண்ணில் இயங்குபவனாகிய மருசியைப் பார்த்து உலகு உபசாரம் மாற்றம் - உலகோர் கூறும் வரவேற்பு மொழிகளுள், உரைத்தலுக்கு உரிய கூறி - அரசனாகிய தான் சொல்வதற்கேற்ற மொழிகளைச் சொல்லி (வரவேற்றான்;) விலகிய கதிர ஆகி - விட்டு விட்டு விளங்குகின்ற ஒளியை உடையனவாய், விளங்கு ஒளிக் கடகக் கையான் - விளங்குகின்ற ஒளியினையுடைய கடகங்களையணிந்த கையினையுடைய மருசியானவன், மலர் அகம் கழும மோந்து - தான் கைப்பற்றியுள்ள மலரை உள்ளங்குளிர மோந்துகொண்டு, மனம்மகிழ்ந்து இருந்த போழ்தில் - மனமகிழ்ச்சியோடு இருந்த சமயத்தில், (எ - று.) விஞ்சையன் எழுந்து ஓலைகாட்ட என்று அடுத்த செய்யுளோடு இயையும்; இதுமுதல் மூன்றுபாடல்கள் குளகம். விலகிய கதிரவாகி விளங்கொளிக் கடகக்கையான் என்பதைப் பயாபதி மன்னனுக்குக் கொண்டு கூட்டிப் பொருளுரைப்பி்னும் அமையும். மருசி மனமகிழ்ந்திருத்தற்குக் காரணம் பயாபதி மன்னன் செய்யும் உபசாரமாகும். |