(இ - ள்.) விஞ்சையன் எழுந்து - வித்தியாதரனாகிய மருசியென்பவன் எழுந்து, தம்கோன் வெள்ளி வேதண்டம் நோக்கி - தம்முடைய அரசனாகிய சுவலனசடியின் வெள்ளி மலையைப் பார்த்து, தடகை அஞ்சலி கூப்பி - தன்னுடைய பெரிய கையை அஞ்சலியாகக் குவித்து, அரக்கு இலச்சினையின் வைத்த - அரக்கினாலியன்ற முத்திரையை வைத்த, எஞ்சலில் ஓலைகாட்ட - குறைதலில்லாத திருமுக வோலையை எடுத்து நீட்ட, இறைமகன் குறிப்பு நோக்கி - அரசனுடைய எண்ணத்தை உணர்ந்து, வஞ்சம் இல் வயங்கு கேள்வி - குற்றமற விளங்குகின்ற நூற்கேள்வியையுடைய, மதிவரன் கரத்தில் வாங்கி - மதிவரன் என்னும் பெயரினையுடையவன் தன்னுடைய கையிலே பெற்றுக்கொண்டு, (எ - று.) அடுத்த செய்யுளில் வாசிக்கின்றான் என்பதனோடு சென்று இயையும். ஓலையிற் செய்தியை எழுதி அதனைச் சுருள்வைத்து, அவ்வோலைச் சுருளை எளிதிற்பிரிக்க முடியாதவாறு அரக்கைக் கொண்டு இலச்சினையிட்டுத் திருமுகம் அனுப்பிச் செய்தி தெரிவித்தல் பண்டைக்கால வழக்கு; மதிவரன். மேன்மையான அறிவையுடையவன் என்று பொருள்தரும். அரசர்களின் அவையில் திருமுகம் எழுதுதற்கும் படித்தற்கும் ஆள்கள் இருப்பர். |