(இ - ள்.) என்று அவன் ஓலை வாசித்து இருந்தனன் - மேற்கூறியவாறு அந்த மதிவரன் திருமுகச் செய்தியைப் படித்து முடித்தான், உரம்கொள் தோளான் இறைவன்கேட்டு - வலிய தோள்களையுடையவனாகிய பயாபதி மன்னன் கேட்டு, வென்றி அம்பெருமை விச்சாதரர் என்பார் - வெற்றியையும் அழகிய பெருமையையும் உடைய வித்தியாதரர்கள் என்று சொல்லப் பெறுபவர்கள், எம்மின்மிக்கார் - எம்மைப் பார்க்கினும் எவ்வகையினும் சிறந்தவர்கள், இன்று - இப்போது, இவன் இவ்வாறு விடுத்தது - இந்தச் சுவலனசடியரசன் இப்படித் திருமணத் தூது விடுத்தது, என்கொல் ஓ என்று சிந்தித்து - யாது காரணமோ என்று எண்ணமிட்டு, மற்று - மேலே, ஒன்றும் உரைக்கமாட்டாது இருந்தனன் - ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தான். (எ - று.) ஒத்தாரோடு திருமணத்தொடர்பு கொள்வது உலக வழக்கம் வித்தியாதரர்களோ தேவர்களிற் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து மனிதர்கள் பெண்கொள்வது தகுதியாகுமோ. சுவலனசடி என்னும் விஞ்சையன் நம் மகனுக்குப் பெண் கொடுக்கிறேன் என்றால் அவனுடைய கருத்து யாதோ என்னும் கலக்கம் பயாபதி மன்னனுக்கு உண்டானபடியால் அவன் யாதும் பேசமுடியாமல் திகைத்திருந்தான். கொல் : அசை. ஓகாரம் ஐயப்பொருளது. |