மருசி சினத்துடன் கூறத்தொடங்குதல்

517. தீட்டருந் திலதக் கண்ணிச் செறிகழ லரசர் கோமான்
மீட்டுரை கொடாது சால 1விம்மலோ டிருப்ப நோக்கி
வாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியா வாறென்
றோட்டருங் கதத்த 2னாகிக் 3கேசர னுரைக்க லுற்றான்.
 

     (இ - ள்.) தீட்ட அரும் - தீட்டுதற்கு அரிய, திலதம் கண்ணி - நெற்றிப்
பொட்டுப்போற் சிறந்த முடிமாலையையும், செறிகழல் - நெருங்கிய வீரக்கழலையுமுடைய,
அரசர்கோமான் - அரசர்கட்குத் தலைவனாகிய பயாபதி மன்னவன், மீட்டு உரை கொடாது
- பதில் உரை கூறாமல், விம்மலோடு இருப்ப நோக்கி - வியப்புடன் இருப்பதைப் பார்த்து,
வாட்ட அரும் பெருமை எம்கோன் - பிறராற் கெடுத்தற்கு அரிய பெருமையை உடைய
எம் அரசனாகிய சுவலனசடியின், ஓலையை மதியா ஆறு என்று - திருமுகத்தைப்
பெருமைப்படுத்தாத செய்கை இதுவாகும் என்று எண்ணி, ஓட்ட அரும் கதத்தன் ஆகி -
போக்குதற்கு அரிய சினத்தையுடையவனாகி, கேசரன் - மருசியானவன், உரைக்கலுற்றான் -
சொல்லலானான், (எ - று.)

பயாபதிமன்னன் திகைத்திருந்த நிலைமையை மருசியானவன் மாறுபாடாக எண்ணிவிட்டான்.
எம் அரசனாகிய சுவலனசடியின் திருமுகத்தை மதியாமல் ஆணவங்கொண்டுள்ளான் என்று
முடிவுசெய்த மருசி பெருஞ்சினத்துடன் பயாபதிமன்னனைப் பார்த்துப் பேசத்
தொடங்கினான் என்க. வாட்டரும் பெருமை என்பதை, வாள்தரும் பெருமை என்று பிரித்து
அதற்கேற்பப் பொருள் உரைப்பினும் அமையும்.

( 87 )