519. பூவிரி யுருவக் கண்ணிப் பொலங்குழை யிலங்கு சோதித்
தேவரே யெனினுந் தோன்றச் சில்பகல் செல்ப வாயில்
ஏவரே போல நோக்கி 1யிகழ்ந்துரைத் தெழுவ தன்றே
மாவிரி தானை மன்னா 2மனிதர தியற்கை யென்றான்.
 

     (இ - ள்.) மாவிரி தானை மன்னா - குதிரைகள் மிகுந்த படையை உடைய
அரசனே!, பூவிரி - மலர்கள் அலர்ந்த, உருவம் கண்ணி - அழகிய முடிமாலையைப்
பூண்டு, பொலம்குழை இலங்கு சோதி - பொன்னாலியன்ற குழையென்னும் காதணி
விளங்குகின்ற ஒளி வடிவமுள்ள, தேவரே எனினும் - தேவர்களாகவேயிருந்தாலும், தோன்ற
சில்பகல் செல்ப ஆயில் - தமக்குத் தெரியச் சில நாட்கள் அடுத்தடுத்து
வருவார்களேயானால் அவர்களையும், ஏவரே போல நோக்கி - ஒன்றுக்கும் பற்றாத
எவரைப்போன்றோ பார்த்து, இகழ்ந்து உரைத்து - அவரை இகழ்ந்து பேசி, எழுவது
அன்றே - எழுந்து போவதல்லவோ, மனிதரது இயற்கை என்றான் - மக்களுடைய
இயல்பான பண்பாக இருக்கின்றது என்று கூறினான், (எ - று.)

மேற்செய்யுளில் வலியவரும் எத்தகையோரையும் பொருட்படுத்தா திகழ்தல் மக்களுடைய
இயற்கை யென்பது நின்னிடத்தில் விளங்குகின்றது என்று கூறிய மருசி, இச்செய்யுளில்
பழக்கப்பட்டவர்கள் தேவர்களாக இருந்தாலும் மனிதர்கள் அவர்களை ஒரு பொருட்படுத்த
மாட்டார்கள் என்று கூறுகிறான். சுவலனசடி மன்னனுக்கும் பயாபதி மன்னனுக்கும் முன்னரே
பழக்கம் உண்டு என்று இச்செய்யுளால் ஊகிக்கலாம்.

மாவிரி - என்பதற்கு யானைகள் மிகுந்த என்று பொருள்கூறினும் பொருந்தும்.
“பொன்னென் கிளவி ஈறுகெட முன்னர்த் தோன்றும் லகார மகாரம்“ என்பதனால்
பொன்குழை பொலங்குழை என்று ஆயிற்று.

( 89 )