(இ - ள்.) அறவிய - அறத்தன்மை பொருந்திய, மனத்தர் அன்றி - உள்ளத்தையுடையவரல்லாமல், அழுங்குதல் இயல்பினார்க்கு - வருந்துந் தன்மைபொருந்திய உள்ளமுடையவர்கட்கு, பிறவியை அறுக்கும் - பிறவியைப் போக்கவல்ல, பெருநிலை எய்தல் ஆம்ஒ - பெரும் பதவியை அடைதல் முடியுமோ? வெறி மயங்கு உருவம் கண்ணி - நறுமணம் பொருந்திய அழகிய முடிமாலையை உடைய, விஞ்சையர் - வித்தியாதரர்களின், விளங்குதானம் - சிறப்பமைந்த கொடையை, மறவியின் மயங்கி வாழும் - மறப்பினால் மயக்கமுற்று வாழ்கின்ற, மனித்தர்க்கு - மனிதர் களிடத்தில், நிகழ்த்தல் ஆமோ - கொடுக்கலாமோ? (எ - று.) பிறவியை அறுக்குங் காட்சிப்பெருநிலை என்பது சைனமதத்தின் இரத்தினத் திரயத்துள் ஒன்றாகும். அது தக்கார்க்கே உண்டாகுமல்லாமல் எல்லோர்க்கும் உண்டாகமாட்டாது. அதுபோல் விஞ்சையர்களுடைய கிடைத்தற்கரிய மகட்கொடையைப் பெற்றுச் சிறப்புறுதல் விஞ்சையர்கட்குத் தான் இயலுமேயல்லாமல் மக்கட்கு இயலாதென்கிறான் மருசி. |