522. அருங்கடி கமழுந் தாரை யழிமதக் 3களிற்றி னாற்றல்
மரங்கெடத் தின்று வாழுங் களபக்கு மதிக்க லாமோ
4இரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நிலத் தவர்கட் கென்றும்
வரங்கிடந் தெய்த லாமோ மற்றெமர் பெருமை 5மன்னா.
 

      (இ - ள்.) அருங்கடி - அருமையான மணம், கமழும் - வீசுகின்ற, தாரை -
தாரையாகவுள்ள, அழிமதம் - மிகுந்த மதநீரைக்கொண்ட, களிற்றின் ஆற்றல் - யானையின்
வல்லமையை, மரம்கெட - மரங்கள் அழியும்படி, தின்று வாழும் - உண்டு வாழுகின்ற,
களபக்கு மதிக்கல் ஆமோ - யானைக் குட்டிக்கு மதிக்க முடியுமோ, இரங்கிடு சிறுபுன்
வாழ்க்கை - இரங்கத்தக்க இழிந்த அற்ப வாழக்கையையுடைய, இநிலத்தவர்கட்கு - இந்த
நிலவுலகத்தில் உள்ளவர்கட்கு என்றும் - எப்பொழுதேனும், எமர் - எம்மைச்சேர்ந்த
வித்தியாதரரின், பெருமை - பெருமையை, மன்னா - அரசனே! வரங்கிடந்து எய்தல்ஆமோ
- பெறுதற்கு வேண்டுதல் செய்து பெருமுயற்சி செய்தேனும் அடைய முடியுமோ? (எ - று.)

பெரிய மதயானையின் ஆற்றலை யானைக்குட்டி அறியாது. அதைப் போன்று வித்தியாதரர்களின் பெருமையை மனிதர்கள் உணரமாட்டார்கள். மனிதர்கள் தவஞ் செய்தாலும்கூட வித்தியாதரர்கள் போன்று பெருமை யடைதல் இயலாது என்கிறான் மருசி. களபம் - முப்பதாண்டு அகவைக்குட் பட்ட யானைக்குட்டி. யானைக்கு அகவை ஆயிரம் என்கின்றனர். 'மரங்கெடத் தின்றுவாழும்' என்னும் தொடர் யானைக்குட்டியின் சிறுமையைப் புலப்படுத்தியது களபக்கு; அத்துச் சாரியை தொக்கது.

( 92 )