பயாபதி மன்னன் பதில் உரைத்தல்

524. ஆங்கவ னுரைப்பக் கேட்டே யம்பர சரனை நோக்கித்
தேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் 2வேண்டா
ஓங்கிய வோலை மாற்றக் குரியவா றுரைக்க மாட்டா
1தீங்கியா னிருந்த தென்றா னெரிசுடர் வயிரப் பூணான்.
 

      (இ - ள்.) ஆங்கு - அவ்வாறு, அவன் - அவ்விஞ்சைச் சாரணன், உரைப்ப -
சொல்ல, எரிசுடர் வயிரப்பூணான் - தீப்போல் ஒளி விடுகின்ற வயிரம் அழுத்திய
அணிகலன்களையணிந்த பயாபதி மன்னவன், கேட்டு - அவன் மொழிகளைக் கேட்டு,
அம்பரசரனை நோக்கி - விண்ணில் இறங்கு வானாகிய அந்த மருசியைநீ பார்த்து,
தேன்கமழ் அலங்கல்மார்ப - தேன் மணம் வீசுகின்ற மாலையை அணிந்த
மார்பையுடையவனே, சிவந்து உரையாடல் வேண்டா - சினங்கொண்டு உரையாடுதல்
வேண்டாம், ஓங்கிய - சிறப்புப் பொருந்திய, ஓலை மாற்றக்கு - திருமுகத்தில் எழுதியுள்ள
மொழிகட்கு, உரியவாறு - தக்கபடியாக, உரைக்கமாட்டாது - பதிலுரைக்க முடியாமல்,
ஈங்கு யான் இருந்தது என்றான் - இங்கே நான் பேசாமலிருந் தேன் என்று மறுமொழி
உரைத்தான், (எ - று.)

மருசியின் சினமொழிகள் பலவற்றையுங்கேட்ட மன்னன், வீணாக ஏன் சினந்து பேசுகிறாய்?
நான் ஆணவத்தினால் பதிலுரையாமலிருக்கவில்லை. நீ கொணர்ந்த திருமுகச் செய்திக்கு
யாது பதிலுரைப்பது என விளங்காமல் திகைத்திருந்தேன் என்கிறான். சிவந்துரையாடல்
சினத்துடன் பேசுதல். “கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள“ என்பது தொல்காப்பியம்,
மாற்றக்கு - மாற்றத்துக்கு : அத்துச்சாரியை தொக்கது.

( 94 )