(இ - ள்.) வெம்சுடர் - வெவ்விய சுடரைக்கொண்ட, தெறுதீ - பொருள்களை அழிக்கவல்ல தீப்போன்ற செந்நிறமுள்ள, விச்சாதரர் என்பார் - வித்தியாதரர் என்பவர் மிக்க நீரார் - மேன்மையான தன்மையையுடைய வர்கள், தெரியுங்காலை - ஆராயுமிடத்து அவர்கள், செஞ்சுடர்த்திலதக் கண்ணித் தேவரே - அழகிய ஒளியுள்ள திலதம்போற் சிறந்த முடிமாலை சூடிய தேவர்களைச் சேர்ந்தவர்களே யாவர், மஞ்சுஉடை மண்ணுள் வாழும் - அழகினையுடைய நிலத்திலே வாழுகின்ற, மக்களுக்கு - மனிதர்களுக்கு, அவர்கள் தம்மோடு - அந்த விஞ்சையர்களோடு, எஞ்சிய - மிகுந்த, தொடர்ச்சி இன்பம் - பெண் கோடலாகிய தொடர்ச்சியினால் நேரும் இன்ப மானது, எய்துதற்கு அரிது - அடைவதற்கு அருமையானதாகும், மாது, ஓ : ஈற்றசைகள், (எ - று.) வித்தியாதரர்கள் மனிதரினும் மேன்மையுடையவர்கள், தேவர்களைப் போலவே பெருமையுடையவர்கள். அவ்வாறானவர்களோடு மனிதர்கள் திருமணத் தொடர்புகொண்டு இன்பம் அடைய முடியாதென்று பயாபதி மன்னன் மருசியிடம் கூறுகிறான். விஞ்சையர்கள் தீப்போன்ற செந்நிறம் உடையவர்களாதலின் வெஞ்சுடர்த்தெறுதீ விச்சாதரர் என்றார். மஞ்சு என்பதனை முகில் என்று பொருள் கொண்டு, முகில் மழைபொழிதலை யுடைய நிலவுலகம் என்று பொருள் கூறினும் பொருந்தும். |