விஞ்சைச் சாரணன் நாணிச் சினம் மாறுதல்

529. 1இறைவனாங் குரைத்த சொற்கேட் டென்னைபா வம்பொருந்தாக்
கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன்
பொறையினாற் பெரியன் 2பூபன் சிறியன்யா னென்று நாணி
3அறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான்.
 

     (இ - ள்.) இறைவன் - பயாபதி மன்னவன், ஆங்கு - அவ்வாறு, உரைத்த -
சொன்ன, சொல் - சொல்லை, கேட்டு - செவியிலேற்று, என்னை பாவம் - என்ன தீவினை,
காவலன் கருதிற்று ஓரேன் - இந்தப் பயாபதி மன்னவன் எண்ணியதை நான்
அறிந்துகொள்ளாமற் போனேன், பொருந்தா - சொல்லுதற்குத் தகுதியில்லாத, கறையவாம்
மொழிகள் சொன்னேன் - குற்றமுடையனவாய சொற்களைக் கூறினேன், (நான் கடுஞ்சொற்
கூறியும் சினந்துகொள்ளாத இந்த) பூபன் - மன்னன், பொறையினால் பெரியன் -
பொறுமைத் தன்மையினால் உயர்ந்தவன், யான் சிறியன் - பொறுமையற்றுப் பேசிய யானோ
சிறுமைக் குணமுடையவனாக இருக்கிறேன், என்று நாணி - என்று வெட்கத்தையடைந்து,
அறிவினால் பெரிய நீரான் - அறிவுடைமை யினால் பெரிய தன்மையுடையவனாய்,
அவிந்தன கதத்தன் ஆனான் - தணிந்து விட்டனவான சினத்தையுடையவனானான்,
(எ - று.)

பயாபதி மன்னனுடைய உள்ளக் கிடக்கையை அறிந்த விஞ்சைச் சாரணன், பெறுமையிழந்து
மன்னனைத் தாக்கிப்பேசிய தன்னுடைய புன்மைக்கு நாணி இரங்கிச் சினமுற்றும் மாறினான்.
அறிவுடையார் தம் குற்றத்தைக் கண்டவிடத்து நாணி இரங்குவர். விஞ்சைச் சாரணன்
அறிவுடையோன் ஆதலால் தன்சிறுமையையும் அரசன் பெருமையையும் உணர்ந்து
வருந்தினான். அவிந்தன கதத்தன் ஆனான் என்பது வடமொழிப் போக்கு. அவிந்தன :
பலவின்பாற் பெயர்.

( 99 )