(இ - ள்.) நாமவேல் நரபதி - பகைவர்கட்கு அச்சத்தையுண்டாக்கு கின்ற வேற்படையை உடைய அப்பயாபதி மன்னனானவன், உலகம் காத்த நாள் - அரசாட்சி செய்து உலகத்தைப் புரந்த நாளிலே; காமவேள் - காமனுடைய; கவர்கணை - உள்ளத்தைக் கவருங்கணை; கலந்தது அல்லது - நாட்டின் எல்லாவிடங்களினும் பொருந்திற்றேயல்லாமல்; தாமம்வேல் வயவர் தம் - வெற்றிமாலையை அணிந்த வேற்படையை உடைய போர் மறவர்களின்; தழல் - தீயைப் போன்ற; அம் கொல்படை - அழகிய கொலைக்கருவியானது; நாமம் நீர்வரைப்பு அகம் - புகழ்மிக்க கடலை யெல்லையாகவுடைய உலகத்துயிர்களை; நலிவது இல்லை - வருத்துதல் ஒரு சிறிதும் இல்லையாகும். (எ - று.) பயாபதி மன்னவன் அரசாட்சி செய்துகொண்டிருந்த காலத்தில் காமன்கணை யாண்டும் பரவிற்றேயல்லாமல் வேறு பகைவர்களுடைய படைக்கலங்களானவை அந்நாட்டு மக்களை வருத்தினவல்ல. பகைவர்கள் படையெடுத்து வந்து நாட்டை நலியாமைக்குக் காரணம் பயாபதி மன்னனுடைய ஆற்றலும் கோடாத செங்கோல் நிலையுமேயாம். நாமநீர் . அச்சந்தங்கிய நீர் என்றுரைப்பினுமாம். |