விஞ்சையன் தன்னை விளக்கிக் கூறுதல்

532. மண்ணவில் முழவின் மாநீர்ப் பவபுர முடைய மன்னன்
பண்ணவில் 3களிநல் யானைப் பவனவே கற்குத் தேவி
கண்ணவில் வடிவிற் காந்தி மதியவள் காதற் பாவை
வண்ணவிற் புருவ வாட்கண் வாயுமா வேகை யென்பாள்.
 
     களி - மதக்களிப்பையுடைய, நல்யானை பவனவேகற்கு - சிறந்த யானையையுடைய
பவனவேகன் என்பவனுக்கு, தேவி - மனைவியாவாள், கண்நவில் - கண் இடைவிடாது
பழகுதற்குக் காரணமான, வடிவின் - வடிவினையுடைய, காந்திமதி அவள் - காந்திமதி
என்னும் பெயரினையுடையாள் அவளது, காதல்பாவை - அன்புடைய மகள், வண்ணம்
வில்புருவம் - அழகிய வில்லைப்போன்ற புருவத்தையும், வாள்கண் - வாட்படையைப்
போன்ற கண்களையுமுடைய, வாயுமா வேகை என்பாள் - வாயுவேகை என்னும்
பெயரினையுடையவள், (எ - று.)

பவபுரத்தரசன் பவனவேகன்; அவனுடைய மனைவி காந்திமதி என்பவளுடைய மகள்,
வாயுமா வேகை. மா இசை நிறைத்தற் பொருட்டு வந்த அசைச்சொல் : உலோகமா பாலன்
என்னுமிடத்து வருவது போன்றது. பண்நவில் என்பதை யானைக்கு அடையாக்கி அழகு
செய்யப்பெற்ற என்று பொருள்கொள்ளினும் பொருந்தும்.

( 102 )