பயாபதியின் ஐயத்தை மருசி அகற்றுதற்கு
உரைக்கத் தொடங்கல்

533. மற்றவ ளோடும் வந்தேன் மன்னயான் மருசி யென்பேன்
அற்றமில் கேள்வி யெந்தை யஞ்சுமா னென்னும் பேரான்
பெற்றதா 1யருசி மாலை பெருமக ளருளினால் யான்
கற்றநூல் 2பல்ல வாகுங் கருமணிக் கடகக் கையாய்.
 

     (இ - ள்.) கருமணி கடகம் கையாய் - சிறந்த மணியைக் கொண்டு செய்த
கடகத்தையணிந்த கைகளையுடையவனே! அவளோடும் வந்தேன்யான் -
அக்காந்திமதியோடு பிறந்தேன் நான், மன்ன - அரசனே!, மருசி என்பேன் -
மருசியென்னும் பெயரினையுடையேன், அற்றம்இல் கேள்வி - எந்தை குறைதலில்லாத
நூற்கேள்வியையுடைய என்னுடைய தந்தை, அஞ்சுமான் என்னும் பேரான் - அஞ்சுமான்
என்னும் பெயரினையுடையவன், பெற்றதாய் அருசிமாலை - எம்மைப் பெற்றதாய்
அருசிமாலை யென்பவளாவாள், பெருமகள் அருளினால் - பெருமை பெற்ற அந்த என்
தாயினாலே, யான் கற்ற நூல் பல்ல ஆகும் - யான் ஓதியுணர்ந்த நூல்கள் பலவாகும்,
(எ - று.)

நான் காந்திமதியுடன் பிறந்தவன். என்னுடைய தந்தையின் பெயர் அஞ்சுமான். என்
தாய்பெயர் அருசிமாலை. நான் அவள்பாற் கற்றுக்கொண்ட நூல்கள் பலவாகும் என்க.
மருசியினுடைய தந்தையின் பெயர் அஞ்சுமான் : தாயின் பெயர் அருசிமாலை;
உடன்பிறந்தாளுடைய பெயர் காந்திமதி. உடன் பிறந்தாட்கு வாயுவேகை மகளாவாள்
என்றவாறு. பெருமகள் அருளினால் என்பதற்குக் கலைமகள் என்று பொருள் கூறினும்
பொருந்தும். பல்ல : விரித்தல் விகாரம்.

( 103 )