(இ - ள்.) ஆதிநாள் - முற்காலத்தில், அரசர் தங்கள் - அரசர்களுடைய, அரும் குலம் - அருமையான குலம், ஐந்தும் ஆக்கி - ஐந்தனையும் உண்டாக்கி, ஓதம்நீர் உலகில் - வெள்ளமான கடல்நீரினால் சூழப்பெற்ற உலகிலே, மிக்க ஒழுக்கமும் தொழிலும் தோற்றி - மிகப்பலவான ஒழுக்கங்களையும் அவரவர்க்கேற்ற பலவான தொழிலையும் உண்டாக்கி, தீது தீர்ந்து இருந்த பெம்மான் - குற்றம் நீக்கியிருந்த பெருமானது, திருவடி சாரச் சென்று - திருவடிகளைத் தன்மனம் பொருந்தப்போய், நீதி நூற்று - அறத்தை ஆராய்ந்து, உலகம்காத்து - இவ்வுலகத்தைப் பாதுகாத்து, நிலம் திருமலர நின்றான் - நிலமானது செல்வத்தைக் கொடுக்க நின்றவன், (எ - று.) அரச குலம் ஐந்து புருவமிசம், குருவமிசம், அரிவமிசம், நாதவமிசம், உக்கிரவமிசம் என்பன. ஐந்து அரச குலங்களை உண்டாக்கி உலகத்தார்க்கு ஏற்ற ஒழுக்கத்தையும் தொழிலையும் தோற்றுவித்தவன் அருகக்கடவுள். அவன் திருவடிசாரச் சென்று உலகங் காத்து நின்றவன் அடுத்த செய்யுளிற் கூறப்பெறும் கச்சன் என்பவன். பெம்மான் : பெருமான் என்பதன் மரூஉ. |