536. மூசிநாட் சுரும்பு பாய முருகுடைந் துருக்குஞ் சோலைக்
காசிநாட் டரசன் செங்கோற் கதிர்முடிக் கச்ச னென்பான்
மாசினாற் கடலந் தானை மன்னமற் றவற்குத் தேவி
தூசினாற் றுளும்பு மல்குல் 1சுதஞ்சனை சுடரும் பூணாய்.
 

     (இ - ள்.) மாசுஇல் நால்கடல் அம்தானை - குற்றமற்ற நான்கு கடல்போன்ற தேர்
குதிரை யானை காலாள் என்னும் அழகிய நால்வகைப் படைகளையுடைய, மன்ன -
அரசனே!, சுடரும் பூணாய் - விளங்குகின்ற அணிகலன்களையுடையவனே!, நாள் -
காலையில் சுரும்பு வண்டுகள், மூசி - மொய்த்து, பாய - பாயாநிற்க, முருகு உடைந்து
உகுக்கும் சோலை - தேன் உடைந்து உகுக்கின்ற சோலையையுடைய, காசிநாட்டு அரசன் -
காசிநாட்டுக்கு உரிய அரசனான, செங்கோல் - செங்கோலையும், கதிர்முடி - ஒளியுள்ள
முடியையும் உடைய, கச்சன் என்பான் - கச்சள் என்பவன், அவற்குத்தேவி - அந்தக்
கச்சன் என்வனுக்கு மனைவி, தூசினால் துளும்பும் அல்குல் சுதஞ்சனை - பட்டாடை
அசைக்கப்பெற்ற அல்குலையுடைய சுதஞ்சனை என்பவள், (எ - று.)
அருகக்கடவுள் உண்டாக்கிய ஐந்து அரசகுலங்களுள் ஒன்றில் பிறந்து அறநூன் முறைப்படி
உலகங்காத்த கச்சன் என்பவனுக்கு மனைவி சுதஞ்சனை என்பாள் என்க. சென்ற செய்யுளில்
வந்த “நிலந் திருமலர நின்றான்“ என்ற எழுவாய்க்குப் பயனிலை இச் செய்யுளில் உள்ள
'காசிநாட் டரசன் கச்சன் என்பான்' என்பதாகும். இது பெயர்ப் பயனிலை என்னப்பெறும்.
மற்று : அசைநிலை.
 

( 106 )