537. 2 வேய்ந்தக நிழற்றுங் கோதை மிளிர்மணிக் கலாப வட்டம்
போந்தகந் திகழ்ந்து மின்னுப் பூந்துகில் பொலிந்த வல்குல்
1வாய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்க
நாந்தகக் கிழவர் கோவே நமியென்பான் நலத்தின் மிக்கான்.
 

      (இ - ள்.) நாந்தகக் கிழவர்கோவே - வாட்படைகொண்டு தொழில் புரியும்
மன்னர்கட்கெல்லாம் மன்னனே!, வேய்ந்து அகம் நிழற்றும் கோதை - அணியப்பட்டு
அவ்விடத்தில் ஒளி விடுகின்ற மாலைபோன்று, மிளிர்மணி கலாபவட்டம் - விளங்குகின்ற
மணிகள் அழுத்திய வட்டமாகிய கலாபத்தையும், போந்து - பொருந்தி, அகம்திகழ்ந்து
மின்னு - தன்னிடத்து விளங்கி ஒளி விடுகின்ற, பூந்துகில் பொலிந்த அல்குல் - அழகிய
ஆடைக் குள்ளே விளங்குகின்ற அல்குலையுடையவளும், ஆய்ந்து அகம்கமழும் கோதை -
நுணுகித் தன்னிடமெல்லாம் நறுமணம் வீசுகின்ற மாலையினை அணிந்தவளுமாகிய, அவள்
பெற்ற அரச சிங்கம் - அந்தச் சுதஞ்சனை என்பவள் ஈன்ற சிறந்த அரசன், நலத்தின்
மிக்கான் - நல்லியல்பில் மிகுந்தவனாகிய, நமி என்பான் - நமி என்று சொல்லப்பெறுபவன், (எ - று.)

கச்சன் என்பவனுக்குச் சுதஞ்சனை என்னும் மனைவியிடம் தோன்றியவன் நமி. கலாபம் -
மாதர் இடையணியுள் ஒன்று. அது பதினாறு கோவையுள்ளது.

( 107 )