538. அங்கவ னரசு வேண்டா 2றக்கடல் படைத்த நாதன்
பங்கயங் கமழு மேனி பவித்திர பரம யோகி
தங்கிய தியானப் போழ்தி றாழ்ந்துதன் றடக்கை கூப்பிப்
பொங்கிய காதல்கூரப் பாடினன் புலமை மிக்கான்.
 

      (இ - ள்.) புலமைமிக்கான் - நல்லறிவு மிகுந்தவனாகிய, அவன் - அந்த நமி
என்பவன், அரசுவேண்டான் - அரசாட்சி செய்தலை விரும்பா தவனாகி, அறம்
கடல்படைத்த நாதன் - அறக்கடலைப் படைத்திட்ட தலைவனும், பங்கயம் கமழும் மேனி -
தாமரைமலரின் மணம் வீசப்பெற்ற உடலையும், பவத்திர பரமயோகி - பரிசுத்தமான
பரமயோகியும் ஆன அருகக் கடவுள், தங்கிய தியானப்போழ்தில் - தங்கப்பெற்ற
தியானத்தை யுடைய காலத்திலே, தாழ்ந்து - வணங்கி, பொங்கிய காதல் கூர - மேன்மேற்
கிளந்த அன்பு மிகுதியாக, பாடினன் அந்தக் கடவுளை நோக்கிப் பாடலானான், (எ - று.)

நமி அரசு வேண்டாமல் அருகக்கடவுளை உள்ளத்திற்கொண்டு தியானித்தான். அந்தத்
தியான மிகுதியால் அருகக்கடவுள் வெளிப்பட்டாற் போல அறிவுக்குப் புலனாயிற்று.
அக்கடவுளைப் பணிந்து பேரன்புகொண்டு பாடலானான் என்பதாம். பாடியதை அடுத்த
மூன்று பாடல்களிற் காண்க. அங்கு : அசை.

( 108 )