குடிகளை வருத்தி இறை கொள்ளாமை | 54. | ஆறிலொன் றறமென வருளி னல்லதொன் றூறுசெய் 1துலகினி னுவப்ப தில்லையே 2மாறிநின் றவரையும் வணக்கி னல்லது சீறிநின் 3றெவரையுஞ் செகுப்ப தில்லையே. | (இ - ள்.) ஆறில் ஒன்று - அந்நாட்டு மக்கள் தங்கள் வருவாயின் ஆறில் ஒரு பகுதியை; அறம் என - அரசனுக்குக் கொடுப்பது அறமாகும் என்று; அருளின் அல்லது- அன்புடன் கொண்டுவந்து கொடுத்தால் அல்லாமல்; ஊறு செய்து - மக்களுக்குத் துன்பஞ்செய்து; ஒன்று - ஒரு பொருளை; உலகினின் உவப்பது இல்லை - உலகிலே விரும்பிப் பெறுவது இல்லை; மாறி நின்றவரையும் - பகையினால் மாறுபாடு கொண்டுள்ளவர் களையும்; வணக்கின் அல்லது - தன்பணிவுடைமையினாலே தன்வழிப்படுத்துவதல்லாமல்; சீறி நின்று - சினந்துபோய்; எவரையும் செகுப்பது இல்லை - எத்தன்மையுடையார்களையும் கொல்லுதல் இல்லை. (எ - று.) பயாபதி மன்னன் எவரையும் வருத்தி இறைப்பொருள் வாங்குதல் இல்லை. பகைவராயினாரையும் தன் பணிவுடைமையினால் தன் வழிப்படுத்து வானேயல்லாமல் கொன்று தொலைக்கமாட்டான். ஏகாரம் இரண்டும் தேற்றப் பொருளைத் தந்து நின்றன. இல்வாழ்வார், “தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை“ யாய அறமாகலின் இவற்றிற்கு ஐந்து பகுதிகளை வைத்துக்கொண்டு அரசனுக்கு ஒரு பகுதியைக் கொடுத்தல் முறைமையாகும். பயாபதி அருக சமயத்த வனாகலின் பகைவர்களையும் கொல்லாதவனாயினான். | (19) | | |
|
|