540. அழனாறும் வெங்கதிரோ னாண வலராது
நிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே
நின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைகட்
சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே.
 

      (இ - ள்.) திருமாலே!, அழல்நாறும் - வெப்பந்தோன்றும், வெம்கதிரோன் -
வெவ்விய ஒளிகளையுடைய கதிரவனும், நாண - வெட்கத்தையடையுமாறு, அலராது -
வளர்தலின்றி என்றும் ஒரே தன்மையாய், நிழல்நாறும் மூர்த்தியாய் - ஒளி விளங்குகின்ற
திருவடி வத்தையுடையவனாய், நின்றாயும் நீயே - நிற்பவனும் நீயே; நின்றாயும் நீயே -
நின்றவனாயிருந்தும் நீயே, நிறைபொருள் எல்லைக்கண் - நிறைந்த பொருள்களின்
எல்லையிடத்து, சென்றாயும் - சென்றவனாயும், வென்றாயும் - வினைகளை வென்றவனாயும்
இருப்பாய், நீயே - நீயே யாவாய், வாழி - நீ வாழவாயாக! (எ - று.)

திருமால் என்பது அருகக்கடவுளின் திருப்பெயர்களுள் ஒன்று. அருகனுடைய
திருவடிவத்தின் ஒளிக்குமுன் கதிரவனுடைய ஒளியும் நிற்கமாட்டாது என்ற கருத்தினால்,
'வெங்கதிரோன் நாண நாறும் மூர்த்தியாய்' என்று கூறப்பட்டது. அவதி ஞானத்தால்
அருகக் கடவுள் எல்லாப்பொருளை யும் காணவல்லவனாதலால் 'நிறைபொருள்
எல்லைக்கண் சென்றாய்' என்றார். நின்றாயும் சென்றாயும் என அமைந்தது ஓர் அழகு.

( 110 )