(இ - ள்.) மணம் நிரைத்து இலங்கும் தாரோய் - வாசனையைத் தொடர்ச்சியாகக்கொண்டு விளங்குகின்ற மாலையை அணிந்தவனே! அவன் - அந்த நமி, உலோகநாதன் குணம் நிரைத்து உலகங்கட்கெல்லாம் தலைவனான அருகக்கடவுளின் குணத்தைத் தொடுத்து, இசைத்த கீதம் கேட்டலும் - பாடிய இன்னிசையைக் கேட்ட உடனே, பணதரர் அரசன் - பாம்புகட்குத் தலைவனாகிய ஆதிசேடன், மணிகொள் கோவைகணம் - மாணிக்கத்தினால் இயன்ற கோவைக் கூட்டத்தை ஒத்து, நிரைத்து - வரிசையாக, இலங்கும் - விளங்குகின்ற, காய்பொன் முடிமிசை - காய்ச்சின பொன்போன்ற முடியின் மீது, ஈர்ஐஞ்ஞூறு பணம் நிரைத்து - ஆயிரம் படங்களைத் தொகுதியாகக் கொண்டு, இலங்க புக்கான் - இலங்குமாறு அங்கு வந்தான், (எ - று.) நமியின் இசையைக் கேட்டவுடன் ஆதிசேடன் தனது ஆயிரம் முடிகள்மீதும் ஆயிரம் மணிகள் விளங்க நமியின் முன்னே தோன்றினான். பணதரர் - படத்தைத் தாங்குபவர்; நாகர்க்குக் காரணப்பெயர். ஆயிரம் முடிகளின்மீதும் ஆயிரம் மணிகள் விளங்குவது, மணியினால் இயன்ற கோவைக்கணம் : நிரைத்து இலங்குவது போன்றது. மற்று, அன்றே : அசைநிலைகள். |