(இ - ள்.) பன்னகர் உலகம் காக்கும் - நாகரின் உலகத்தைப் பாதுகாக்கின்ற, பாய்கதிர் - பரவுகதிர் - பரவுகிற ஒளிகளையுடைய, பசும்பொன்மேனி - பசும்பொன்னை யொத்த உடலுடனே, மின் அவிர்வயிரச்சூட்டு - மின்னல்போல் விளங்குகின்ற வயிரம் போல் உறுதியான உச்சிக்கொண்டையாகிய, சுடர்விடு மணி பொன்பூணான் - ஒளி விடுகின்ற மணிகள் பதித்த பொற்பூணையுடைய ஆதிசேடன், தன் நிகர் இகந்த தோன்றல் பரமன் பாதம் சரண்என - தனக்கு ஒப்பில்லாது விளங்கு பவனான கடவுளின் அடிகளே அடைக்கலம் என்று சொல்லி, மன்னர்கட்கு அரசன் முன்னை - அரசர்கட்கு அரசனான நமிச்சக்கர வர்த்தி முன்னே, வலம்கொடு - வலஞ்செய்து, வணக்கஞ் செய்தான் - வணங்கினான், (எ - று.) ஆதிசேடன், அருகக்கடவுளுடைய தியானத்திலே ஈடுபட்டிருக்கும் நமியை வணங்கினான். தன்னிகர் இகந்த தோன்றல் ஆதிசேடன் எனினும் அமையும். இனி மன்னர்கட்கு மன்னனாகிய நமி, தன்நிகர் இகந்த தோன்றலாகிய பரமனது பாதம் சரண் என்னாநிற்கையில், பூணான் அம்மன்னவனை வலங்கொண்டு வணக்கஞ்செய்தான் எனினுமாம். |