(இ - ள்.) உறுவலி - மிகுந்த ஆற்றலமைந்த நமியரசன், அதனை கேளா - அந்த ஆதிசேடன் சொன்னதைக் கேட்டு, மாற்றத்து - ஆதிசேட னுடைய மொழியினால், உள்மிசை தொடர்பு நோக்கி - அந்த ஆதிசேட னுடைய மனதிலே ஏற்பட்டிருக்கும் பற்றுதலைப் பார்த்து, பண்மிசை படர்ந்த சிந்தை - இசையின்மீது சென்ற கருத்தினையுடைய, பணதான் பணிந்து - ஆதிசேடனை வணங்கி, விண்மிசையவர்கள்போல - தேவருலகத்தில் இருக்கின்ற தேவர்களைப்போல, வேண்டிய விளைக்கும் செல்வம் - விரும்பியவற்றை உண்டாக்கவல்ல செல்வத்தை, மண்மிசை - இந்த நிலவுலகின்மேல், பெறுவன் ஆக - நான் பெறுபவன் ஆகுக, இது என் மனத்தது என்றான் - இதுவே என்னுடைய உள்ளத்திலே இருக்கின்ற விருப்பமாகும் என்று நமியரசன் தெரிவித்தான், (எ - று.) தான் விரும்பியதைத் தருதற்கு, ஆதிசேடன் விருப்பத்தோடு தன்னை வினாவுகின்றான் என்றுணர்ந்த நமியரசன் ஆதிசேடனைப் பணிந்து, தேவர்களுடைய இன்பவாழ்க்கைச் செல்வம் தனக்கு இந்த நிலவுலகத்தில் வேண்டும் என்று தெரியப்படுத்திக் கொள்ளுகிறான். பாம்புகள் இசைச் சுவையை நன்கு உணரும் ஆற்றலமைந்தவைகள்; அதற்கு ஏற்ப ஈண்டு, 'பண்மிசைப்படர்ந்த சிந்தைப் பணதரன், என்றார். |