மன்னனின் முந்நிழல்

55. அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர்
முடிநிழன் முனிவரர் 1சரண மூழ்குமே
வடிநிழல் வனைகதி ரெஃகின் மன்னவன்
குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே.
 

     (இ - ள்.) வடிநிழல் வனை கதிர் எஃகின் மன்னவன் - தீயிலிட்டுக் காய்ச்சி
அடிக்கப்பட்டு ஒளியைச் செய்கின்ற கூர்மையுள்ள வேற்படையை யுடைய பயாபதி
மன்னனது; அடிநிழல்-கால் அடிகளின் நிழல்; அரசரை அளிக்கும் - பிற நாட்டுச்
சிற்றரசர்களைப் பாதுகாக்கும்; ஆய்கதிர் முடிநிழல் - சிறந்த ஒளியையுடைய முடியின் நிழல்
முனிவரர் சரணம் மூழ்கும் - சிறந்த முனிவர்களது திருவடிகளிலே படியும்; குடை நிழல் -
வெண்கொற்றக் குடையின் நிழல்; உலகு எலாம் குளிர நின்றது - உலகத்திலுள்ள உயிர்த்
தொகைகளெல்லாம் இன்பத்தையடையுமாறு சிறந்து நிற்கும். (எ - று.)

     பயாபதி மன்னனுடைய அடிநிழல் சிற்றரசர்களைப் பாதுகாக்கும்; முடிநிழல்
முனிவர்களது திருவடிகளிலே படியும்; குடைநிழல் உலகத்துயிர்கட்கு இன்பத்தையளிக்கும்.
முனிவர்-காமம் வெகுளி மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் முனிந்தவர்.
வரர்-மேலானவர். குளிர நிற்றல் யாதொரு துன்பமும் இல்லாமல் இன்பத்தை
யடைந்திருத்தல்.
 

 (20)