கயிலாயத்து முடியில் தவஞ்செய்தல்

554. விண்ணுயர் விளங்கு கோட்டு விடுசுடர் விளங்க மாட்டாக்
கண்ணுயர் கதலி வேலிக் கார்க்கயி லாய நெற்றிப்
புண்ணியக் கிழவன் போகிப் பொலங்கலம் புலம்ப நீக்கித் திண்ணிய தியானச்
செந்தீச் செஞ்சுடர் திகழ நின்றான்,
 

     (இ - ள்.) புண்ணியக்கிழவன் - நல்வினைக்கு உரிமையுடையவனாகிய அந்த
வாகுவலி மன்னன், விண்உயர் விளங்கு கோட்டு - வானிலே உயர்ந்து விளங்குகின்ற
முடிகளையுடையதும் விடுசுடர் விளங்கமாட்டா - உலகத்திற்கு ஒளியைக் கொடுக்கிற
ஞாயிறு திங்கள் விண்மீன் ஆகியவைகள் தன் னொளிக்கு முன்னே விளங்கமாட்டாததும்,
கண்உயர் கதலி வேலி - கண்ணுக்கு உயர்ந்து தோன்றுகிற கதலிவனத்தை
வேலியாகவுடையதும், கார் - முகில் தவழப்பட்டதுமாகிய, கயிலாய நெற்றி -
கயிலாயமலையின் முடிக்கு, போகி - போய், பொலம் கலம்புலம்ப நீக்கி - பொன்னினால்
இயன்ற அணிகலன்கள் ஒலிக்குமாறு களைந்து அகற்றிவிட்டு, திண்ணிய தியானம் செந்தீ -
உறுதியாகிய தவத்தினால் ஆன செவ்விய தீயின், செஞ்சுடர் திகழநின்றான்-செந்நிறஒளி
விளங்குமாறு தவத்திலே ஊன்றியிருந்தான், (எ-று.)

வாகுவலிமன்னன் கைலாயமலையின் முடிக்குச்சென்று அணிகலன் களை அகற்றிவிட்டுத்
தவத்தினால் ஒளியுண்டாகுமாறு அமைந்து நின்றான், நல்வினையில் மிகுதியாக
ஈடுபட்டிருந்தமையின் வாகுவலி, 'புண்ணியக் கிழவன்' என்னப்பெற்றான்,

( 124 )