(இ - ள்.) பூமிநாதன் - நிலவுலகத்திற்கு அரசனாயிருந்த வாகுவலியின், கழல் அணிந்து இலங்கு பாதம் - பண்டு வீரக் கழலை அணிந்து விளங்கிய அடிகளிலே, கருங்கண் புற்றத்து - கருநிறமாகத் தோன்றும் தொளைகளைக் கொண்ட புற்றுக்களில், அழல் அணிந்து எழுந்த - தீயை அணிந்துகொண்டு புற்றுக்களில், சீறி எழா நின்ற, ஐவாய் - ஐந்து வாய்களையும், அருமணி கிடைத்தற்கரிய மாணிக்கங்களையும் உடைய, ஆடும் நாகம் - படமெடுத்தாடும் தன்மையுள்ள நாகப்பாம்புகள், கலந்த - சுற்றிக்கொண்டு கிடந்தன, பொழில் அணிந்து எழுந்தவல்லி - பொழில்களை அழகு படுத்திக்கொண்டு எழுந்தன்மையையுடையவான கொடிகள், புதைந்தன - அவன் உடலிலே நெருங்கிப்படர்ந்தன, குழல் அணிந்து எழுந்த குஞ்சி - அவ்வரசனுடைய குழற்சியைப் பொருந்தி எழுந்த மயிர்தொகுதியை, குருவிக்கூட்டம் குடைந்தன - சிறு பறவைகளின் கூட்டம் தமது கூடாகக்கொண்டு குடையலாயின, (எ - று.) தவநிலையில் அமர்ந்துள்ள வாகுவலி மன்னனுடைய அடிகளிற் புற்றுண்டாகிப் பாம்புகள் சுற்றின. அவனுடைய உடல்மீது கொடிகள் படர்ந்தன. அவனுடைய தலைமயிரைக் குருவிக் கூட்டம் கூடாகக் கொள்ளலாயின. பூமிநாதன் என்னுஞ்சொல் மேலும்கீழும் சென்று பொருள் தருமாறு நடுநிலையாய் அமைந்துநின்றது. இதனை மத்திம தீபம் என்ப. |