(இ - ள்.) அடுக்கிய - ஒழுங்குற அடுக்கப்பட்ட, அனிச்சப்பூவின் அமளிமேல் - மெல்லிய அனிச்சமலராலாய படுக்கையின் மேலே, அரத்தச் செவ்வாய் - குருதிபோலச் சிவந்த வாயினையுடையவரும், வடிகயல் நெடுங்கணர்தம் - மாவடுப்பிளவினையும் கயல்மீனையும் ஒத்த நெடிய கண்களையுடையவரும் ஆகிய மகளிருடைய, வளைக்கையால் - வளையலணிந்த கைகளாலே, வளைத்த மார்பில் - தழிஇ வளைக்கப்பட்ட மார்பினிடத்தே, தொடுக்கிய தொடுத்த போலும் - பூந்தொடையலாகத் தொடுக்கக் கருதிப் பூமாலை தொடுப்போராற் றொடுக்கப்பட்ட மாலையைப் போன்று, துறுமலர்கத்திமாதர் - செறிந்து நிரல்பட்ட மலரையுடைய குருக்கத்தி யாகிய மகளிர், கொடிக்கையால் - அழகிய தமது கொடிகளாகிய கைகளாலே, இடுக்கல் - தழுவுதலை, கொற்றவன் - வாகுவலிமன்னன், தன்மேல் குலவப் பட்டான் - தனது உடலின்மிசைப் பொருந்தப்பெற்றான், (எ - று.) கொற்றவன் : வாகுவலி. |