(இ - ள்.) ஓவல்இல் குணங்கள் என்னும் - நீங்குதல் இல்லாத குணங்கள் என்கின்ற, ஒளி மணிக்கலங்கள் தாங்கி - விளங்குகின்ற மணியணி களைப்பூண்டு, தேவர்கள் உலகம் எல்லாம் - தேவலோகமெல்லாம், செழு மணம் அயர்ந்து - மிகுந்த மணம் பொருந்தி, கூட்ட - வீச, கேவலப் பெண் என்பாள் ஓர் கிளர் ஒளி மடந்தை தன்னை - கேவலப் பெண் என்று பெயர் பூண்ட ஒப்பற்ற விளங்குகின்ற ஒளியையுடைய மடந்தையை, ஆவியுள் அடக்கி - தனக்குள்ளே ஒரு பகுதியாகக்கொண்டு, பின்னை - பிறகு, அமரர்க்கும் அரியன் ஆனான் - தேவர்கட்கும் அரியவன் ஆனான், (எ- று.) வாகுவலிமன்னன் உயரிய பண்புகளை மேற்கொண்டு தேவர்களினும் சீர்த்திபெற்ற நிலைமையை எய்தினான். கேவலப்பெண் - கேவல ஞானமாகிய பெண். “கேவலமடந்தை“ என்றார் சீவகசிந்தாமணியாரும். கேவலம் - வீடுபேற்றுநிலையாகிய முடிவுநிலை. மேலும் “முடிவென்னும் பெண்ணரசி தன்னை“ என்றும், “முடிவென்னும் பூங்கொடியும்“ என்றும் கூறுவார். “கேவல மடந்தை யென்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கண் பூவலர் முல்லைக் கண்ணிப் பொன்னொரு பாக மாகக் காவலன் றானோர் கூறாக் கணணிமை யாது புல்லி மூவுல குச்சி யின்பக் கடலினுண் மூழ்கி னானே. சிந்தாமணி.“ |