வாகுவலியின் வழித்தோன்றலே
பயாபதி மன்னன் என்றல்

561. எங்கள்கோ 1னிவன்க ணின்று மிக்குயர் குலத்து வேந்தர்
தங்களோர் புறஞ்சொல் வாராத் தன்மையா லுலகங் காத்தார்
அங்கவர் வழிக்கண் தோன்றி யகலிடம் வணங்க நின்ற
இங்கிவன் பெருமை நீயு மறிதியா லேந்த லென்றான்.
 

     (இ - ள்.) எங்கள்கோன் இவன்கண் நின்று - எம் தலைவனாகிய
இவனிடத்திருந்துவந்த, மிக்கு உயர் குலத்து - பெரிதும் உயர்ந்த குலத்தில் தோன்றிய,
வேந்தர் - அரசர்கள், தங்கள் - தங்களிடத்திலே, ஓர்புறஞ் சொல்வாராத் தன்மையால் -
ஒரு பழிச் சொல்வராத தன்மையோடு, உலகம் காத்தார் - உலகத்தைப் பாதுகாத்தார்கள்,
அங்கு அவர் வழிக்கண் தோன்றி - அத்தன்மையுடைய அவர்களின் வழியிலே பிறந்து,
அகல் இடம் வணங்க நின்ற - இந்நிலவுலகத்தார் வணங்கும்படியிருக்கின்ற, இங்கு இவன்
பெருமை - இங்கிருக்கின்ற இந்த அரசனுடைய பெருமையை, ஏந்தல் நீயும் -
சிறந்தவனாகிய நீயும், அறிதியால் என்றான் - அறிவாய் என்று கூறி முடித்தான், (எ - று.)

எங்கள் குலத்து அரசர்கள் ஒருவகையான பழிச்சொல்லும் அற்றவர்கள்; இந்தப் பயாபதி
மன்னவனுடைய பெருமையை நீயும் அறிவாய் என்றுகூறி இத்துடன் பயாபதி
மன்னவனுடைய வேள்வியாசான் தன் உரையை முடித்துக்கொள்கிறான்.

( 131 )