(இ - ள்.) குடித்தொடர் இரண்டும் கேட்டு - சுவலனசடி பயாபதி என்னும் இருதிறத்தவரின் வழிமுறைச் செய்தியையும் கேட்டு, இருந்த வேந்தர் - அங்குக் கூடியிருந்த அரசர்கள், குறுமயிர் எறிந்து - மயிர்க்கூச்செறிந்து, கண்ணுள் - கண்ணினுள்ளே, பொடித்த நீர்த்திவலை சிந்தப்புகழ்ந்தனர் - திவலை திவலையாகத் தோன்றிய நீர்த்துளி கீழேவிழ இருமரபையும் புகழ்ந்து பேசினார்கள், அடுத்து எரி அலர்ந்த செம்பொன் - உடனே நெருப்பிற்காய்ச்சி யுருக்கிய மாற்றுயர்ந்த பொன்னாலியன்ற, அணிமணி முடியினான் - அழகிய மணிகள் அழுத்திய முடியினையுடைய பயாபதி மன்னன், அங்கு - அப்போது, எடுத்து உரைகொடாத முன்னம் - மேற்கொண்டு செய்தியை எடுத்துப் பேசத்தொடங் குவதற்கு முன்பு, கேசரன் இதனைச்சொன்னான் - மருசியானவன் மேற்செய்யுளில் வருஞ்செய்தியைச் சொல்லலானான். (எ - று.) சுவலனசடி பயாபதி ஆகிய இருமன்னர்களின் வழிமுறை வரலாறுகளையுங் கேட்டு அங்கிருந்த மன்னர்கள் இன்பக்கண்ணீர் சொரிந்தனர். பயாபதி மன்னன் பேசத் தொடங்குவதற்கு முன்பு மருசி மேலும் பேசலானான். |