(இ - ள்.) இப்படித்து ஆயின் - குலவரலாறு இவ்வாறாக இருக்கு மானால், சுற்றம் - இருகுலத்துக்கும் உறவு முறைத்தன்மை, பண்டை இசைந்தது - முன்னரே அமைந்து நின்றது, என்னை - அஃதெவ்வாறெனின், அப்படி அரிய செய்த அடிகள் - அவ்வாறு அருமையான தவத்தைச் செய்த பெரியோன், எம் அரசன் ஆய - எம்முடைய அரசனான, கைபுடை இலங்கு செவ்வேல் - கையினிடத்து விளங்குகிற செவ்விய வேலையுடைய, கச்சற்கு - கச்சனென்பானுக்கு, மருகனார் என்று - உடன் பிறந்தாள் மகன் என்று, ஒப்பு உடை - செய்திகளை ஒப்பச் சொல்லுதலையுடைய, புராண நன்னூல் உரைப்பது - சிறந்த புராண நூலிற் சொல்வதை, யான் அறிவன் என்றான் - நான் உணர்வேன் என்று சொன்னான், (எ - று.) கச்சன் என்று கழறப்பெற்றவனுக்கு, வாகுவலி என்பானை மருகன் என்று எம்முடைய புராண நூலில் கூறியிருத்தலால் இருகுலத்தார்க்கும் உறவுமுறை முன்னரே அமைந்து கிடந்தது என்று மருசி குறிப்பிட்டான். அத்தைமகனை மருகன் என்றலும் உண்டு. பண்டை - ஐயீற்றுடைக் குற்றுகரம். |