(இ - ள்.) ஆதிநூல் - முதன்மையான நூலிலே, அமைச்சர்க்கு ஓது - அமைச்சர்களுக்குக் கூறுகிற, மாண்பு எலாம் - நல்லியல்வுகளெல்லாம், அமைந்து நின்றான் - பொருந்தியருப்பவன், தூதனாச்சொல்லின் - தூதுவனாகச் சென்று செய்தி கூறுவானாயின், சொல்லா சூழ்பொருள் இல்லைபோலாம் - அத்தகையோன் அறிந்து சொல்லாத ஆராய்ச்சிக்கு உரியசெய்தி இல்லையாகும், இன்னன புகுந்த போழ்தில் - இப்படிப்ட்ட நன்மை ஒருவனுக்கு நேர்ந்தபோது, கோதுஇலா குணங்கள் தேற்றி - குற்றமில்லாத குணங்களைத் தெளிவித்து, கொழித்துரை கொளுத்தல் - தெள்ளியெடுத்து நல்லுரையைக் கூறுதலைச் செய்தல், ஏதிலார்க்கு ஆவது உண்டோ- அயலார்களால் ஆகுமோ? என்றான் - என்று கூறினான், (எ - று.) அமைச்சர்க்கு அமையவேண்டிய நற்குணங்களெல்லாம் பொருந்தி யுள்ளவன் தூதுவனாக ஓர் அரசனுக்கு அமைவானாயின், அவ்வரசனுக்கு எவ்வகைச் சூழ்ச்சியையும் அத்தூதுவனே சூழ்ந்து, மாற்றாரிடத்தும் ஏற்ற வகையால் சொல்வானாகையால் அவ்வரசனுக்குப் பிறர் சொல்லித் தரவேண்டியது ஒன்றுமில்லை யென்பதாம். தகுதிவாய்ந்த தூதுவனைப் பெற்றுள்ள அரசர்களைப் பகைவர்களால் யாதுஞ் செய்ய முடியாததென்பதும் இச்செய்யுளால் பெறப்படும். சைநர்களின் ஆகமங்கள் மூன்றனுள் ஆதி என்பது ஒன்றாகையால், ஆதி நூல் என்பது அதனைக் குறிக்குமெனினும் பொருந்தும். |