அரசியல் சுற்றத்துடன் உலகப் பொதுமை நீக்குதல்

57. 4மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால்
நூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா
1ஆலுநீ ரன்னமோ டரச வன்னமே
போலநின் றுலகினைப் பொதுமை நீக்கினான்.
 

     (இ - ள்.) மேலவர் - முனிவர்; மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால் நூலினால்
பெரியவர் - உண்மையான பொருள்களை விரித்துக் கூறுகின்ற சிறப்பமைந்த அறநூற்களை
யுணர்ந்த அமைச்சர்கள் முதலியோர்; நுழைந்த சுற்றம் ஆ - தன்னையடுத்து நெருங்கிய
அரசியல் சுற்றமாக; ஆலும்நீர் அன்னமோடு - களித்து ஒலிக்கின்ற நீரில் வாழ்கின்ற பல
அன்னப்பறவை களுடனே; அரச அன்னமே போல நின்று-அரச அன்னம் விளங்கி
நிற்பதைப்போல நின்று; உலகினைப் பொதுமை நீக்கினான்- நிலவுலகத்தைப் பல
அரசர்களுக்கும் பொதுவாந் தன்மையினின்று நீக்கித் தன்னதாக்கினான். (எ - று.)

     மேலவர் என்பதற்கு, வேள்வியாசிரியர்கள் படைத்தலைவர்கள் நிமித்திகப் புலவர்கள்,
உயர்குடிப் பிறந்தவர்கள் முதலியவர்களைக் கூறினும் கூறலாம். மேலவாம் என்று
பாடங்கொள்ளின் அதனை மெய்ப்பொருளுக்கு அடைமொழியாக்குக. சால்-உரிச்சொல்.
நுழைந்த சுற்றம்-மறைமுகமான செயல்கட்கும் கலந்தெண்ணுதற் பொருட்டு உடனிருக்கும்
உறுதிச் சுற்றம். சுற்றம், சுற்றியிருப்பவர். சுற்று-அம்: அம் கருத்தாப்பொருள் விகுதி.
மூக்குங் காலுஞ் சிவந்து மற்றையுடல் முழுவதும் வெளுத்திருப்பது அரச அன்னம் என்பர்.
அமைச்சர்களை அன்னப்புட்கட்கு ஒப்புக் கூறியது என்னை எனின், நன்மை தீமைகளை
ஆராய்ந்து, தீமையை ஒழித்து, நன்மையையே கடைப் பிடிக்குமாறு அரசனை நன்னெறிக்கட்
செலுத்துந் தகவு நோக்கி யென்க.

( 22 )