(இ - ள்.) உலன் நலன் அடு திண்தோள் - திரண்ட கல்லின் நன்மையைக் கெடுக்கின்ற வலிய தோள்களையுடையவனும், ஊழி - பன்னாள் வாழும் இயல்புடையவனும், வேல் ஓடை யானை - வேலினையும் நெற்றிப்பட்டத்தை யணிந்த யானைப் படையையும் உடையவனும் ஆகிய, சலநலசடி என்பேர் - சுவலனசடி என்னும் பேரைப் பூண்ட, தாமரைச் செங்கணான் தன் - செந்தாமரைமலரைப்போன்ற கண்களையுடைய வித்தியா தர மன்னவனது, குலநலம்மிகு - குலநலத்தினால் மிகுந்த, செல்கை - செல்வாக்கையுடைய, கோவோடு ஒப்பார்கள் வாழும் - அரசனோடு ஒத்தவர்கள் வாழ்கின்ற, நலன் அமர் - நன்மை பொருந்தின, நளி - குளிர்ந்த, சும்மை - பேரொலியையுடைய, தொல்நகர் நண்ணினான் - பழமையான இரதநூபுர நகரத்தை அடைந்தான். மருசி இரதநூபுர நகரத்தை யடைந்தான். தோள்கள் தம்முடைய திண்ணிய தன்மையால் தூண்களில் ஆற்றலைக் கெடுத்தன. மருசியின் இரத நூபுர நகரம் குலநலத்தாலும் செல்வநலத்தாலும் சிறந்தவர்கள் வாழ்கின்ற இடமாகும். அங்குள்ள மக்கள் அரசசெல்வம் போன்ற பெருஞ்செல்வம் படைத்தவர்கள் என்பார் “செல்கைக் கோவொடொப்பார்கள் வாழும்“ என்றார். |