இதுமுதல் 28 செய்யுள்கள் மரீசியின் கூற்று
577. வெல்க வாழிநின் வென்றி வார்கழல்
செல்க தீயன சிறக்க நின்புகழ்
மல்க நின்பணி முடித்து வந்தனன்
பில்கு மும்மதப் பிணர்க்கை யானையாய்.


     (இ - ள்.) மதம் - மூன்று வகையான மதநீரை, பில்கும் - பொழியும், பிணர்க்கை -
சருச்சரையமைந்த துதிக் கையையுடைய, யானையாய் - யானைப்படையுடைய வேந்தே,
வாழி - நீ நீடுவாழ்க!, நின் - உன்னுடைய, வென்றி வார் கழல் - வெற்றிக்கு
அடையாளமாகக் கட்டப்பட்ட நீண்ட கழலினையுடைய அடிகள், வெல்க - வெற்றி எய்துக!,
தீயன - தீமைகள், செல்க - ஒழிக!, நின் புகழ் - உனது புகழ், சிறக்க - சிறந்து ஓங்குமாறு,
மல்க - பெருகுக!, நின் பணி - அரசே உன்னுடைய கட்டளையாகிய காரியத்தை, முடித்து -
நன்கு செய்து முடித்து, வந்தனன் - வந்துள்ளேன், (எ - று.)  

     சிறக்க - செயவென் வாய்பாட்டு வினையெச்சம், மும்மதம் - யானையின் கன்னம்,
கை, கோசம் என்னும் மூன்றிடங்களினின்றும் பெருகும் மதநீர். சருச்சரை - பிணர் என்பன,
சொரசொரப்பு என இக்காலத்தார் வழங்கும் பொருளுடையன.

     யானையாய்! வெல்க! வாழி! செல்க! புகழ்சிறக்க மல்க! பணி முடித்து வந்தனன்
என்றான், என்க.

( 5 )