(இ - ள்.) முள் அரைப் பசு முளரி - முள் நிறைந்த நாளங்களை யுடைய பசிய நிறமமைந்த தாமரை அடர்ந்த, அம்தடத்துள் - அழகிய குளத்தினுள்ளே, இரைந்து எழும் ஒலி செய் வண்டு இனம் - ஒய் எனும் இரைச்சல் உண்டாம்படி எழுந்து இசைபாடுதலைச் செய்கின்ற பலவகை வண்டுகளும், கள் இரைத்து உகக் கண்டு - அங்ஙனம் எழுந்தோறும் ஓசையுடனே தேன் துளிப்ப அத்தேன் ஒழுகுதலைப் பார்த்து, வண் சிறைப்புள் - வளமிக்க சிறகுகளையுடைய பறவைக் குழாங்கள், இரைப்பதோர் - மகிழ்ச்சியாலே ஆரவாரித்தற்கு இடமாகவுள்ள ஒரு, பொய்கை சார்ந்ததும் - குளத்தின் பக்கத்தே சென்றதும், (எ - று.) தம் சிறகுகளினின்றும் தேன்றுளிக்க ஒய் யென்றிரைந்தெழும் வண்டினங்களைக் கண்டு பறவைகள் மகிழ்ச்சியால் ஆரவாரித்தன என்க. |