(இ - ள்.) நித்திலம் மண் நிரந்து - முத்துக்களையும் மாணிக்கங் களையும் நிரலாகப் பதித்து, வெள்ளி வேய் - வெண் பொன்னாலாகிய தகட்டால் மூடிய, சித்திரம் பத்தி பலகை - சித்திரிக்கப்பட்டு நிரலாக அமைக்கப்பட்ட பலகைகளையுடைய, வேதிகை - சுற்றுத் திண்ணையின் இடையே, சித்திரங்களிற் செறிந்து - ஓவியங்களில் நிறைந்த, காமனார் அத்திரம் என - மன்மதனுடைய பகழிச்சாலையைக் கண்டாற்போல, அசோகம் கண்டதும் - அசோகமரம் நின்ற காட்சியைக் கண்டு இன்புற்ற செய்தியும், (எ - று.) சுற்றுத்திண்ணையின் இடையில் தழைத்து மலர்ந்து நின்ற அசோக மரம், மன்மதன் அத்திரசாலையைச் சித்திரத்தில் செறிய எழுதி வைத்ததை ஒத்துத் தோன்றுகின்றது என்க. மதனன் மலரம்புகள் ஐந்தனுள் அசோகமலர் ஒன்றாதலின் அசோகமரத்தை அத்திரசாலை என்றார். அத்திரம் - அத்திரசாலை, ஆகுபெயர், செறிந்து என்பதைச் செறிந்த எனத் திரித்துக் கொள்க. அசோகம் அருகன் வீற்றிருத்தற்கு நீழல் கொடுக்குமர மாகலின் சமண்மதத்தோர் அம்மரத்தைச் சூழவேதிகை யியற்றிப் போற்றுதல் மரபு என்க. |