(இ - ள்.) நல் புறத்தன - நல்லிலக்கணம் அமைந்த முதுகையுடை யனவும், நாற்பதாம் வயது இப்புறத்தன - நாற்பது வயதிற்குட்பட்டனவும் ஆகிய, அளம் கரும் கைம்மா - இளமை மாறாத கரிய யானைகளின், மெய்ப்புறத்து மேல் - திண்ணிய எருத்தின் மிசை ஏறி இவர்ந்து, முழங்கு தானையோடு - தன்னை எதிர்கொண்டழைத்தற் பொருட்டு முரசு முதலிய இசைக் கருவிகள் முழங்கவந்த படைகளோடும் சென்று, அப்புறத்து அரசவை அடைந்ததும் - அயலதாகிய பயாபதி மன்னனுடைய அத்தாணி இருக்கையை எய்திய செய்தியும், (எ - று.) நாற்பதாட்டைப் பருவமிகவாமையே, யானைகட்குச்சிறந்த பருவம் என்பார், நாற்பதாம் வயதிப்புறத்தன என்றார். நாற்பதாம் வயது கடப்பதற்கு முன்னரும் கிழத்தோற்றம் வந்துவிடுதல் உண்மையின், இளங்கருங்கைம்மா என்றார். அப்புறத்து அரசவை அடைந்த செய்தியும் (கூறினான் என்க.) |