(இ - ள்.) மன்னவன் கழல் - பயாபதி வேந்தனுடைய வெற்றிக்கழல ணிந்த அடிகளை, வணங்கி நின்றதும் - வணக்கம் செய்து அவன் திருமுன் நின்றதும், பின் அவன்தனால் - அதன் பிறகு அவ்வேந்தனுடைய அருளால், இருக்கை பெற்றதும் - தன் தகுதிக்கேற்ப ஆதனத்தின்கண் இனிதின் அமர்ந்ததும், பொன்னிறப்பொறி - பொன்மயமான இலச்சினை யிடப்பட்டதும், புகழ்ந்த - சொல்லழகு பொருளழகு முதலிய திருமுக விலக்கணங்களால் நிறைந்து அறிஞர்களால் புகழப்பட்டதுமாகிய, சாதகம் - திருமுடங்கலை, தொழுது துன்னி - கைகூப்பித்தொழுது அதன்கண் மனத்தால் நெருங்கி, வாசகம் கொண்டதும் - அதன்கட் பொறித்துள்ள மொழிகளை விழிப்புடன் ஓதுவித்து அறிந்துகொண்டதும், (எ - று.) சாதகம் - செய்துமுடித்தது என்னும் பொருட்டு. துன்னுதல் - விழிப்புடன் பொருளுணர்தல். அரசவை அடைந்து பயாபதியை வணங்கியதும், அம் மன்னனால் இருக்கை பெற்றதும் பின்னர்த் திருவோலையைத் தான் அவனுக்கீந்ததும் அவன் அதனை நனகுமதித்து ஓதுவித்துணர்ந்ததும் ஆகிய செய்திகளையும் (கூறினான் என்க.) |