அரசியர்

59. மற்றவன் றேவியர் மகர வார்குழைக்
கொற்றவர் குலங்களை 1விளக்கத் தோன்றினார்
இற்றதிம் மருங்குலென் 2றிரங்க வீங்கிய
முற்றுறா முலையினார் கலையின் 3முற்றியார்.
 
     (இ - ள்.) அவன் தேவியர் - அந்தப் பயாபதி மன்னனுடைய மனைவியர்; மகரவார்
குழை - மகரமீன் வடிவாகச் செய்யப்பட்ட நீண்ட குண்டலங்களையணிந்தவர்கள்;
கொற்றவர் குலங்களை - தாம் பிறந்த குடியையும் புகுந்த குடியையும்;
விளக்கத்தோன்றினார் - சீர்த்தி விளங்கும் படியாகச் செய்யப் பிறந்தவர்கள்; இம்மருங்குல்
இற்றது என்று இரங்க - கண்டவர்கள் இவ்விடையானது ஒடிந்துபோய்விட்டது என்று
கூறிவருந்து மாறு; வீங்கிய - பருத்துள்ள, முற்றுறா முலையினார் - இளங்கொங்கைகளை
யுடையவர்கள்; கலையின் முற்றியார் - மகளிர்க்குரிய கலைகளில் முதிர்ச்சி பெற்றவர்கள்.
(எ - று.)

     மற்று - அரசனையும் தேவியரையும் பிரித்து நிற்கிறபடியால் பிரிநிலைக்கண்வந்தது.
காதணிகளை மகரமீன் வடிவாகச் செய்தல் பண்டைநாள் வழக்கு. மருங்குல் இற்றது என்று
கூறுமாறு பருத்த கொங்கைகள் என்புழி முதிர்ந்தவைகளோ என்னும் ஐயமேற்படா
திருத்தற்கு முற்றுறா என்னும் அடை கொடுத்தார். முற்றுறா - முற்றியார் என்னுமிடத்து முரண்டொடை அமைந்து நிற்கின்றது.
 

 (24)