(இ - ள்.) பின்னை - அதன் பிறகு, மன்னவன் - அரசன், பேணி - பரிசில் முதலியவற்றால் தன்னை மகிழ்வித்து, நன்மொழி - நன்மைகெழீஇய இனிய மொழிகளை, சொன்ன வண்ணமும் - சொல்லிய தன்மையும், சுற்றம் ஆயதும் - உளத்தால் பொருந்திய உறவினன் ஆகியதும், பொன்நகைக் குலம் - அழகிய அணிகள், பொலிந்த கண்கொள - பொலிவுற்று விளங்குதலாலே தன் கண்களைக் கவர்ந்து கொள்ளும்படி, இன்னகைச் சிறப்பு அருளி - இனிய முறுவலாகிய சிறந்த பொருளை வழங்கி, ஈந்ததும் - மேலும் பல பெருமைகளை வழங்கியதும், (எ - று.) உபசரிப்பவர் முகமலர்ந்து முறுவல்பூத்து உபசரியாத வழி ஏனைய உபசாரங்கள் பயனற்றன வாதலும், பிறவாற்றான் உபசரிக்க வியலாத வழியும், இன்னகை ஒன்றே விருந்தினரை நன்கு மகிழச்செய்யும் பெருமை யுடைத்தாதலாலும், இன்னகையைச் சிறப்பென்றான்.மன்னவன் நன்மொழியாற் றன்னைப் பேணிச் சுற்றமாயதும் இன்னகைச் சிறப்பருளி ஈந்ததும் (கூறினான் என்க.) |