(இ - ள்.) அருங்கலம் - அரிய அணிகலன்களையுடைய, குழாத்து - கூட்டமாகவுள்ள, அரசன் தேவிமார் - பயாபதி மன்னனுடைய மனைவியரும், பெருங்குலத்தவர் - உயர்குடிப் பிறப்பினருமாகிய மகளிர்கள், பெயர்ந்து - மீண்டும், கண்டதும் - தன்னைப் பார்த்ததும், மற்றுஉளோர் - வேறாகவுள்ள வர்களும், ஒருங்கு - ஒன்றுகூடி, உரைத்த வார்த்தையும் - முகமனாகக் கூறிய இன் சொற்களும் ஆகிய எல்லாவற்றையும், சுருங்கில் கேள்வியான் - குறைவற்ற கேள்விச் செல்வத்தையுடைய மரீசி என்னும் சிறந்த தூதன், தொழுது சொல்லினான் - சடிவேந்தனை வணங்கிச் சொன்னான், (எ - று.) அளவளாவிச் சுற்றமாய் விட்டமையாலும் தான் திருமணச் செய்தி கொண்டு வந்தமையானும் தன்னைப் பெரிதும் மதித்தமைக்குச் சான்றென்பான் உயர்குலத்து அரசன் றேவிமார் தன்னைக் கண்டு முகமன் மொழிந்தமையும் கூறினான் என்க. 578 முதல் 590 வரையுள்ள செய்யுள்கள் தொடர்ந்து குளகமாய்ச் சொல்லினான் என்னும் முடிவு பெற்றன என்க. |